மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, 30 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள், ஆவின் பாலகம் அமைக்க மானியம், நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் உதவி செய்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவை தொடர்ந்து, தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த செல்வலட்சுமி என்பவர் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், "மாற்றுத்திறனாளியாகிய நான் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தேனி மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தொழில் பழகுனர் பயிற்சியில் சேர விண்ணப்பித்து 2 முறை நேர்காணலில் பங்கேற்றேன். ஆனால், எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 2 பெண் குழந்தைகளுடன் போதிய வருமானம் இன்றி கஷ்டப்படுவதால் தொழில் பழகுனர் பயிற்சியில் பங்கேற்கவோ அல்லது கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புக்கோ ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அவரை பழகுனர் பயிற்சியில் சேர்த்துக்கொள்ள மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஓரிரு நாட்களில் தபால் மூலம் இதற்கான நியமன உத்தரவு அனுப்பி வைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.