ஓட்டல் ஊழியரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ‘அபேஸ்’
சின்னாளப்பட்டியில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சின்னாளப்பட்டி:
சின்னாளப்பட்டி அருகே உள்ள கரட்டழகன்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). ஓட்டல் ஊழியர். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருந்தார். அந்த நகைகள் ஏலத்திற்கு விடுவதற்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த நகைகளை திருப்புவதற்கு தனது உறவினர்களின் உதவியை அவர் நாடினார். அவர்கள் பணம் இல்லாததால் நகைகளை கொடுத்ததாக தெரிகிறது.
அந்த நகைகளை அம்பாத்துரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கொண்டு வந்து நேற்று அவர் அடகு வைத்தார். அதில் கிடைத்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை தனது மொபட்டின் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். இந்தநிலையில் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டிக்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் இருந்த டீக்கடை முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு தங்கராஜ் டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மொபட் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் உள்ளே வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராஜ் அதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முக கவசம் அணிந்த 2 மர்ம நபர்கள் தங்கராஜை நோட்டமிட்டப்படி வங்கியில் இருந்ததும், அவர்கள் தங்கராஜ் மொபட்டை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.