நெல்லையில் சாலை மறியல்: கட்டுமான தொழிலாளர்கள் 75 பேர் கைது
கட்டுமான தொழிலாளர்கள் 75 பேர் கைது
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கம்பி, சிமெண்டு, ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், அருணாசலம், சங்கர், ஜான் ஜெயபால், பேரின்பராஜ், மோகன்ராஜ் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன்களில் அழைத்துச்சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.