ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தாலும் பயன் இல்லை கடையம் பகுதியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் குளங்கள்
கடையம் பகுதியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் குளங்கள்
நெல்லை:
ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தாலும் கடையம் யூனியன் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இந்த பகுதிக்கு குற்றாலம், ராமநதி உபரிநீரை திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஊரெல்லாம் வெள்ளம்
வடகிழக்கு பருவமழையால் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிலும், தென்காசி மாவட்டத்தில் சிற்றாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளின் பாசன வசதி கொண்ட அனைத்து குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது.
இப்படி ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்த போதிலும், தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வானம் பார்த்த பூமியாக பரிதாபத்துடன் காட்சி அளிக்கின்றன.
வறண்டு கிடக்கும் குளங்கள்
அந்த யூனியனில் உள்ள மடத்தூர் தெற்கு குளம், வடக்கு குளம், நரியங்குளம், வடக்கு மடத்தூர் குளம், மணல்காட்டானூர் குளம், லெட்சுமியூர் குளம், புங்கம்பட்டி குளம், வெங்கடாம்பட்டி குளம், வயல்காட்டூர் (ராமச்சந்திரபட்டணம்) பிள்ளையார்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் போதிய நீர்வரத்து கால்வாய் இல்லாததால் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. ஒருசில குளங்கள் இருப்பதே தெரியாத அளவுக்கு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது.
இந்த குளங்கள் முழுமையாக நிரம்பி 7 ஆண்டுகள் ஆகிறது. கிணற்று பாசன வசதி உள்ள விவசாயிகள் மட்டும் அந்த தண்ணீரை நம்பி விவசாய பணியை தொடங்கி உள்ளனர். மற்ற விவசாயிகள் தங்களது பகுதியில் பலத்த மழை பெய்து குளம் நிரம்புமா? என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.
விவசாயிகள் கவலை
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருந்தபோதிலும் இந்த பகுதி குளங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. குற்றாலம் மற்றும் ராமநதி தண்ணீர் அருகில் உள்ள கிராமங்கள் வழியாக சென்ற போதிலும் குறிப்பிட்ட குளங்களுக்கு தண்ணீர் கிடைக்காதது வேதனைக்குரிய விஷயம்.
குற்றாலம் சிற்றாறு தண்ணீர் நெல்லை -தென்காசி மெயின் ரோட்டில் உள்ள மகிழ்வண்ணநாதபுரம் நாகல்குளத்தில் இருந்து மதிகெட்டான் கால்வாய் வழியாக பூலாங்குளம், கோவிலூற்று குளங்கள், வடமலைப்பட்டி குளம் வழியாக பண்டாரகுளம் வரை செல்கிறது. ஆனால் அதிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த குளங்களுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் வறண்டு கிடக்கும் குளங்கள் நிரம்பும் வகையில் அரசு தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
மேல்மட்ட கால்வாய்
கடையம் யூனியனில் எங்களது பகுதியில் 7 ஆண்டுகளாக குளங்கள் நிரம்பவில்லை. இதற்கு ராமநதி -ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் ஓரளவுக்கு பயன் அளிக்கும். எனவே உடனடியாக அந்த கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதில் உள்ள தடைகளை சரிசெய்து, பணியை முடித்து வறண்டு கிடக்கும் எங்கள் பகுதி குளங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் கடையம் யூனியனில் உள்ள பெரும்பாலான குளங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும்.
மேலும் குற்றாலம் சிற்றாறு தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்கும் வகையில் நாகல்குளத்தில் இருந்து நெல்லையப்பபுரம் வழியாக வெங்கடாம்பட்டி குளத்துக்கு தண்ணீரை கொண்டு வந்தால் அந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும். இதேபோல் பூலாங்குளம் வழியாக கோவிலூற்று குளத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் இருந்து லெட்சுமியூர் குளத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால் லெட்சுமியூர், மணல்காட்டானூர் குளங்களை நிரப்பி விவசாயம் செழிப்படைய செய்ய முடியும். இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து இந்த பகுதி விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் வீணாகும் தண்ணீரை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிலையில் ஆலங்குளம், கரும்பளியூத்து, வள்ளியூர், சேரன்மாதேவி, கொண்டாநகரம் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு மழை பெய்தது.