தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்: பாலியல் தொல்லை புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் வேண்டுகோள்
பாலியல் தொல்லை புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
நெல்லை:
பாலியல் தொல்லை புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
விழிப்புணர்வு முகாம்
நெல்லை மாநகர போலீஸ் சார்பில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் கொக்கிரகுளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் தலைமை தாங்கினார். மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
நெல்லை மாநகரை பொறுத்தவரை பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் சாதி, மத ரீதியாக பிரச்சினைகளில் சிக்குகிறார்கள். அவர்களிடம் ஆசிரியர்கள் நல்ல கருத்துகளை எடுத்துக்கூற வேண்டும். தினமும் மாணவர்கள் நலனுக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
உடனடி நடவடிக்கை
குழந்தைகள் குறித்த புகாரை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். மாணவிகளை பாலியல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பது ஆசிரியர்களின் கடமை ஆகும். பாலியல் தொந்தரவுகள் குறித்த புரிதலை மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சங்கர், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ராமேசுவரி, முத்துலட்சுமி மற்றும் மாநகரில் உள்ள அரசு, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,முதல்வர்கள் கலந்து கொண்டனர்.