கொலை அச்சுறுத்தல்:போலீசாரிடம் ஆடியோ, வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.

கொலை அச்சுறுத்தல் தொடர்பாக நேற்று போலீசாரிடம் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. தன்னிடம் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் பிரமுகர் கோபாலகிருஷ்ணாவுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

Update: 2021-12-02 21:27 GMT
பெங்களூரு: கொலை அச்சுறுத்தல் தொடர்பாக நேற்று போலீசாரிடம் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. தன்னிடம் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் பிரமுகர் கோபாலகிருஷ்ணாவுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

எம்.எல்.ஏ.வை கொலை செய்ய...

பெங்களூரு எலகங்கா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எஸ்.ஆர்.விஸ்வநாத். இவர், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வை, தொழில்அதிபரான தேவராஜ் என்ற குல்லா தேவராஜுடன் சேர்ந்து காங்கிரஸ் பிரமுகரான கோபால கிருஷ்ணா கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அதாவது கூலிப்படைக்கு ரூ.5 கோடி கொடுத்து எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோபால கிருஷ்ணா மீது புகார்கள் எழுந்தன. 

இதுதொடர்பாக தேவராஜுடன், கோபால கிருஷ்ணா பேசும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. வெளியிட்டு இருந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை கொலை செய்ய கோபாலகிருஷ்ணா திட்டமிட்டதாகவும் எஸ்.ஆர்.விஸ்வநாத் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

எஸ்.ஆர்.விஸ்வநாத்திடம் விசாரணை

இந்த சம்பவம் தொடா்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ராஜனகுன்டே போலீஸ் நிலையத்தில் எஸ்.ஆர்.விஸ்வநாத் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், கோர்ட்டில் அனுமதி பெற்று கோபால கிருஷ்ணா, தேவராஜ் மீது ராஜனகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே தேவராஜை பிடித்து ராஜனகுன்டே போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். 

நேற்று காலையில் ராஜனகுன்டே போலீசார், எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தி, கொலை மிரட்டல் குறித்தும் கோபால கிருஷ்ணா, தேவராஜ் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டனர். அப்போது கொலை திட்டம் தொடர்பான ஆடியோ, வீடியோ ஆதாரங்களை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. வழங்கினார். 

இந்த சந்தர்ப்பத்தில் கோபால கிருஷ்ணாவுடன் சேர்ந்து கொலை திட்டம் தீட்டியது தவறு என்றும், இதற்காக தன்னை மன்னித்து கொள்ளும்படி கூறியும் தனக்கு தேவராஜ் எழுதி அனுப்பிய மன்னிப்பு கடிதத்தை போலீசாரிடம் எஸ்.ஆர்.விஸ்வநாத் சமர்ப்பித்தார்.

நோட்டீசு

இதுகுறித்து பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த வழக்கை விசாரிக்க தொட்டபள்ளாப்புரா துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாரபட்சம் இன்றி சட்டப்படி விசாரணை நடந்து வருகிறது. காங்கிரஸ் பிரமுகரான கோபால கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) அவர் விசாரணைக்கு ஆஜராவார். அவரிடமும் விசாரணை நடத்திவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை சட்டப்படி போலீசார் எடுப்பார்கள்’’, என்றார்.

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான பின்பு எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ‘‘என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில், என்னிடம் இருந்த ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்துள்ளேன். கோபால கிருஷ்ணாவை கைது செய்யும்படி நான் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பதை தீவிரமாக எடுத்து கொண்டுள்ளேன். இந்த வழக்கில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடமும் வழக்கு பற்றி தெரிவித்தேன்’’ என்றார்.

கோபால கிருஷ்ணாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டம்
எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதால், காங்கிரஸ் பிரமுகரான கோபால கிருஷ்ணாவுக்கு எதிராகவும், அவரது நடவடிக்கையை கண்டித்தும் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் பா.ஜனதா தொண்டர்கள் நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அவரை கைது செய்யும்படி கோஷமிட்ட தொண்டர்கள், அவரது உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் மாதநாயக்கனஹள்ளி அருகே பெங்களூரு-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜனதாவினர் மற்றும் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.விஸ்வநாத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

எம்.எல்.ஏ. ஆதரவாளர் தற்கொலை முயற்சி

எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வை கொலை செய்ய திட்டமிட்ட கோபாலகிருஷ்ணாவை கைது செய்யக்கோரி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரான கோபால் என்பவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

மேலும் செய்திகள்