தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நெல்லையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் என கேட்டு வாங்குங்கள், என நான் பேசியதாக அளித்த புகாரின்பேரில் நெல்லை டவுன் போலீசார் என் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
தவறான தகவலின் அடிப்படையில் என் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மேலும் இந்த மனு குறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.