உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை கட்டிலில் சுமந்து சென்ற கிராம மக்கள்

குளித்தலை அருகே சேறும், சகதியுமான சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை கட்டிலில் சுமந்தபடி கிராம மக்கள் சென்றனர்.

Update: 2021-12-02 18:33 GMT
குளித்தலை, 
விஸ்வநாதபுரம்
குளித்தலை அருகேயுள்ள மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிகளம் என்கிற பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். நடுப்பட்டி- பணிக்கம்பட்டி செல்லும் பிரதான சாலையில் இருந்து இந்த பகுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது.
இந்த சாலையை தார் சாலையாக மாற்றவும், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சேறும், சகதியுமான சாலை
குளித்தலை பகுதியில் தற்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக விஸ்வநாதபுரம் பகுதிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 62) என்பவருக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 அவசர ஆம்புலன்சுக்கு இப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 
இப்பகுதிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேறும், சகதியுமாக உள்ள இந்த பாதையில் வாகனத்தை செலுத்த வழியில்லை என தெரிவித்து ஆம்புலன்சை பிரதான சாலையிலேயே நிறுத்திவிட்டனர். 
கட்டிலில் படுக்க வைத்து...
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த முதியவரை வேறு வழி இன்றி கிராம மக்கள் கட்டிலில் படுக்க வைத்து அவரை சுமந்தபடியே ஆம்புலன்சில் ஏற்றி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அந்த முதியவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விஸ்வநாதபுரம் பகுதியில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் கிரம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்