விவசாயி மர்மமாக இறந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல்
ராமநாதபுரம் அருகே விவசாயி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே விவசாயி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடந்தது.
விவசாயி மர்ம சாவு
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ளது கிளியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 46). இவர் நேற்று முன்தினம் மாலை தொருவளுர் கண்மாய் அருகே தனது வயலில் உரம் போடுவதற்காக சென்றார். இந்நிலையில் வயல் அருகே அவர் சென்ற மேட்டார் சைக்கிள் மட்டும் நீண்ட நேரம் நின்றதால் அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்று பார்த்தபோது திருநாவுக்கரசு உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் திருநாவுக்கரசுவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் திருநாசுக்கரசு சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் திடீரென போராட்த்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றனர். அதுவரை உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அரசு ஆஸ்பத்திரி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசிங், வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், தாசில்தார் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
சாலைமறியல்
இதனை ஏற்காமல் நீண்ட நேரம் சாலைமறியல் நீடித்ததால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக அதிதீவிர அதிரடிப்படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதோடு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலைமறியல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் முன்னிலையில் வீடியோ பதிவுடன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இறந்த திருநாசுக்கரசுவிற்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவ கல்லூரி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாலைமறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.