தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு

ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தை வருகிற 31-ந் தேதி முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-02 17:57 GMT
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தை வருகிற 31-ந் தேதி முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம்
ராமேசுவரம் ராமர் பாதம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம். இந்த தொலைக்காட்சி நிலையம் ரூ.5½ கோடி நிதியில் கடந்த 1993-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் கட்டப்பட்டது. சுமார் 1,060 அடி உயரத்தில் இந்த தொலைக்காட்சி நிலையத்தின் உயர்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த உயர் கோபுரத்தில் 285 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் கற்களால் கட்டப்பட்டும், அதன் உச்சிப் பகுதியில் 45 மீட்டர் உயரத்தில் இரும்பு கம்பிகளால் டவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக உயரமான தொலைக்காட்சி உயர் கோபுரத்தை கொண்டது இந்த நிலையத்தில் தான் அமைந்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு முதல் ராமேசுவரத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தூர்தர்ஷன் நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பெற்று ராமேசுவரத்தில் உள்ள தொலைக்காட்சி நிலையம் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த தொலைக்காட்சி நிலையத்தில் அகில இந்திய வானொலியின் சேவைகளும் செயல்பட்டு வருகிறது.
இந்த தொலைக்காட்சி நிலைய ஒளிபரப்பு சேவையானது இலங்கை யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் வரை கிடைத்தது. மேலும் ராமேசுவரம் தீவு பகுதி மீனவர்களுக்கு இந்த தொலைக்காட்சி நிலைய உயர் கோபுரம் மீன் பிடித்து கரை திரும்பும் போது ஒரு கலங்கரை விளக்கம் போன்று பயனுள்ளதாக இருந்து வருகிறது.
நிரந்தரமாக மூடல்
தற்போது வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பது குறைந்துவிட்டது. இதனால் இந்தியாவில் உள்ள 412 தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதுடன் அதற்கான உத்தரவையும் பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தின் தரைவழி ஒளிபரப்பு முழுமையாக நிறுத்தப்படுவதாகவும், வருகிற டிசம்பர் 31-ந் தேதி முதல் ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் தூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம் நிரந்தரமாக மூடப்படுவதாகவும் மத்திய அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமேசுவரம் தொலைக்காட்சி நிலைய துணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறும்போது, 25 ஆண்டுகளுக்கு மேலாக ராமேசுவரத்தில் செயல்பட்டுவரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் தரைவழி ஒளிபரப்பு வருகிற 31-ந் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்