நடவடிக்கை கோரி அ.தி.மு.க.வினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
அ.தி.மு.க.வில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டதாக பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்
அ.தி.மு.க.வில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டதாக பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
அ.தி.மு.க. புறநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல் மற்றும் நிர்வாகிகள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாயிடம் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சார்பில் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். தற்போது உடுமலை எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறேன். அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக விருப்ப மனுக்கள் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
போலி ஆவணம் மூலம் தவறான தகவல்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக இருந்த அருண்பிரசாத் என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் குறைக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நீக்கி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அருண்பிரசாத் கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்னைப்பற்றி தவறான தகவலை சமூகவலைதளங்களில் பரப்பியிருந்தார். இது குறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் நான் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்துடன் போலியாக கட்சியின் லெட்டர் பேட் தயாரித்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். இது திட்டமிட்டு போலியாக தயார் செய்யப்பட்ட ஆவணம் ஆகும்.
சட்டப்படி நடவடிக்கை
பொதுமக்கள் மத்தியில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பி என்னை மிரட்டியும், அச்சுறுத்தல் விடுத்தும் ஒருமையில் பேசி செயல்பட்டு வருகிறார். எனவே அருண்பிரசாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.