அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை விரைவாக நடத்த வலியுறுத்தி கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த கோரி நாடு முழுவதும் முதல் மற்றும் 2-ம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை நடத்திடு, பணிச் சுமையை குறைத்திடு என பதாகை களை ஏந்தியவாறு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:-
பணிச்சுமை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள் டாக்டர்கள் படித்துக்கொண்டே பணியாற்றி வருகிறோம். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வு வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணத்தால் செப்டம்பர் மாதம்தான் நடைபெற்றது.
மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால், ஏற்கனவே 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர் களுக்கு பணிச்சுமையும், மன உளைச்சலும் அதிகமாகி உள்ளது. எனவே முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாண வர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.