கழிவுகளை தோண்டி எடுத்து அதிகாரிகள் ஆய்வு

பசுமை தீர்ப்பாய உத்தரவை தொடர்ந்து கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வந்து புதைத்த கழிவுகளை தோண்டி எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-12-02 16:15 GMT
பொள்ளாச்சி

பசுமை தீர்ப்பாய உத்தரவை தொடர்ந்து கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வந்து புதைத்த கழிவுகளை தோண்டி எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முற்றுகை போராட்டம்

தமிழக-கேரள எல்லையில் பொள்ளாச்சி அருகே செமனாம்பதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி மருத்துவக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டினர். அதனை பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர். 

இதை அறிந்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொக்லைன் எந்திரம், 3 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோன்று கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவது தொடர்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது.

அறிக்கை 

இதையடுத்து பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது. மேலும் வழக்கை விசாரித்து கழிவுகள் கொட்டிய இடத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன் தலைமையில் உதவி பொறியாளர் செல்வகணபதி மற்றும் வருவாய் துறை, ஒன்றிய அதிகாரிகள், போலீசார் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புதைக்கப்பட்ட கழிவுகளை தோண்டி எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறியதாவது:-

மண் எடுத்து ஆய்வு

நாளிதழ்களில் வெளியான செய்தியை தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் கழிவுகள் தோண்டி எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு பிறகே மருத்துவ கழிவுகளா? அல்லது வேறு கழிவுகளா? என்பது தெரியவரும். மேலும் மண் வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளதா என்று மண் எடுத்து ஆய்வுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மண் ஆய்வறிக்கை உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பசுமை தீர்ப்பாயத்திடம் கொடுக்கப்படும்.

கேரள அரசுக்கு உத்தரவு

அதன்பேரில் விசாரணை நடத்தி எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் அளிக்கும் உத்தரவின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். 

இதற்கிடையில் கழிவுகள் கொண்டு வந்த லாரிகளில் கேரள அரசு பணிக்கு என்று நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்