குரங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவைகளுக்கு உணவு வழங்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Update: 2021-12-02 16:15 GMT
வால்பாறை

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவைகளுக்கு உணவு வழங்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.  

சிறந்த சுற்றுலா தலம்

கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு திண்பண்டங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குகின்றனர். இதனால் அவை வனப்பகுதியில் உணவு தேடி தின்னும் சுபாவத்தை மறந்துவிடுகின்றன. மேலும் சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் வழங்கும் உணவுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. 

குரங்குகள் நடமாட்டம் 

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் இயப்படுகின்றன. மேலும் அங்கு குரங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. 

இதற்கு காரணம், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் உணவு பொருட்களை வழங்குவதுதான். அதற்காகவே குரங்குகள் மலைப்பாதையில் காத்து கிடக்கின்றன. வனப்பகுதியில் கிடைக்கும் உணவுகளை தேடி தின்னாமல் மனிதர்கள் வழங்கும் உணவுகளை தின்பதால் குரங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

தவிர்க்க வேண்டும்

மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்பு இருக்கிறது. இது தவிர அவை உணவுக்காக காத்திருக்கும்போது சாலையை அடிக்கடி கடக்கின்றன. அப்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அதை தவிர்க்க வேண்டும். 

வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளையும், வனப்பகுதிகளையும் பார்த்து ரசித்து இயற்கையையும் நேசிக்க பழக வேண்டும். மேலும் வால்பாறை பகுதியில் வாழ்ந்து வரும் வனவிலங்குகளுக்கோ, இயற்க்கைக்கோ ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்