ஏடிஎம் கார்டை மாற்றி நூதன முறையில் ரூ18 ஆயிரம் மோசடி
வந்தவாசியில் ஏடிஎம் கார்டை மாற்றி நூதன முறையில் ரூ18 ஆயிரம் மோசடி செய்த மாநில கபடி போட்டி நடுவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசியில் ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன முறையில் ரூ18 ஆயிரம் மோசடி செய்த மாநில கபடி போட்டி நடுவர் கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்தார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 40) கட்டிட தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள வங்கியில் காலாவதியான ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக புதிய கார்டு வாங்கினார்.
இதை பதிவு செய்வதற்காக அதேப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது ஆங்கிலத்தில் வந்த வார்த்தைகளை பார்த்து திணறியுள்ளார்.
அப்போது அங்கிருந்த செங்கம் தாலுகா புதிய குயிலம் கிராமத்தை சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் சரண்ராஜ் (31) என்பவர் ஏழுமலைக்கு உதவி செய்வது போன்று, அந்த ஏ.டி.எம். கார்டை வாங்கி ஓ.டி.பி. நம்பர் ஏழுமலை செல்போனுக்கு வந்ததும், சரண்ராஜ் ரகசிய நம்பரை பதிவு செய்தார்.
பின்னர் தான் வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை ஏழுமலையிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.
ரூ.18 ஆயிரம் மோசடி
அவர் சென்றதும் புதிய ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.9 ஆயிரம் வீதம் 2 முறை ரூ.18 ஆயிரத்தை ஏழுமலை கணக்கில் இருந்து எடுத்துள்ளார்.
ஏழுமலை வீட்டுக்குச் சென்று செல்போனை பார்த்தபோது பணம் எடுத்ததாக அதில் குறுஞ்செய்தி வந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
துணைபோலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சரண்ராஜ் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கபடி போட்டி நடுவர் கைது
மேலும் வந்தவாசி சன்னதி தெருவில் ஏ.டி.எம். மையங்களில் இதேபோன்று மோசடி செய்வதற்காக சுற்றிக் கொண்டிருந்த சரண்ராஜை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் உடற்கல்வி ஆசிரியருக்கு படித்து விட்டு மாநில கபடி மற்றும் கோ-கோ போட்டிகளில் நடுவராக இருந்தவர் என்பதும், விழுப்புரம் பகுதிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.