ஊட்டி அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஊட்டி அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஊட்டி
ஊட்டி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பி. அம்ரித் திடீரென ஆய்வு செய்தார்.
திடீர் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா பரவல், அரசின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்று பாடங்கள் படித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் பகுதியில் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊட்டி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேற்று காலை 11 மணிக்கு திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என பார்வையிட்டார்.
தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் உரையாடினார். பின்னர் தொடர்ந்து மாணவர்களின் வருகை விவரங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
கழிப்பறைகளை பார்வையிட்டார்
இதையடுத்து கழிப்பறைகள் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டார். பின்னர் மாணவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என கண்டறிய வேண்டும்.
இடைநின்ற மாணவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார்களா என ஆசிரியர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதீன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.