கூலிப்படையை ஏவி கொல்ல நடந்த சதி குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை

கூலிப்படையை ஏவி கொல்ல நடந்த சதி குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-12-01 20:37 GMT
பெங்களூரு:கூலிப்படையை ஏவி கொல்ல நடந்த சதி குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

கூலிப்படையை ஏவி கொல்ல...

பா.ஜனதாவை சேர்ந்தவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.. அவர் பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொலை செய்ய காங்கிரஸ் பிரமுகர் கோபால கிருஷ்ணா என்பவர் வீடியோ ஒன்றில் பேசுவது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்வது குறித்து பேரம் பேசும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவில் இருப்பது தான் தானா? என்பதை அவர் உறுதி செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து எஸ்.ஆர்.விஸ்வநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

என்னை கொல்ல கோபாலகிருஷ்ணா திட்டமிட்ட விஷயம் குறித்த வீடியோ இன்று (நேற்று) தொலைக்காட்சிகளில் வெளியானதை கவனித்தேன். அதற்கு முன்பு நேற்று (நேற்று முன்தினம்) இரவு 7 மணியளவில் எனக்கு தபால் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது, என்னை கோபாலகிருஷ்ணா என்பவா் கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

தோல்வி அடைந்தார்

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நான், உடனடியாக போலீஸ் மந்திரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தேன். அந்த கடிதத்தை குள்ள தேவராஜ் என்பவர் எனக்கு அனுப்பியுள்ளார். காங்கிரசை சேர்ந்த கோபாலகிருஷ்ணா, எலகங்கா தொகுதியில் எனக்கு எதிராக 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.  தேர்தல் விரோதம் காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம்.நான் கடந்த 42 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். எலகங்கா காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அங்கு நான் பா.ஜனதாவை பலப்படுத்தினேன். 

எலகங்கா தொகுதியில் எனக்கு மக்களிடையே ஆதரவு உள்ளது. அதை கோபாலகிருஷ்ணாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னை அரசியல் ரீதியாக அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் குறுக்கு வழியில் என்னை கொல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து போலீசிலும் புகார் கொடுத்துள்ளேன். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்துமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

யாரும் ஆதரிக்கக்கூடாது

இந்த கடிதம் வருவதற்கு முன்பே எனக்கு அரசல்புரசலாக இதுகுறித்த தகவல் கிடைத்தது. ஆனால் இதை நான் நம்பவில்லை. பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. நான் எப்போதும் தனியாக நடமாடுகிறேன். மெய்க்காப்பாளர் ஒருவர் மட்டும் உள்ளார். தினமும் காலையில் எனது பண்ணை வீட்டிற்கு தனியாக காரில் சென்று அங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்த விவகாரத்தில் கோபாலகிருஷ்ணாவை நியாயப்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.வை கொல்ல திட்டமிட்டது சாதாரண விஷயமல்ல. இதில் தவறு செய்தவர்களை யாரும் ஆதரிக்கக்கூடாது. இந்த சதி குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார் என்பது தெரிய வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதால் தான் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கிறேன்.

பாதுகாப்பு வழங்கவில்லை

என்னுடன் ரவுடிகள் உள்ளதாக டி.கே.சிவக்குமார் சொல்கிறார். அவருடன் முனிவர்கள்-சாதுக்கள் இருக்கிறார்களா?. முந்தைய அரசு இருந்தபோதே எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அரசுக்கு கடிதம் எழுதினேன். கூடுதலாக ஒரு மெய்க் காப்பாளரை நியமிக்குமாறு கேட்டேன். ஆனால் அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்கவில்லை. எனக்கு ஆதரவாக எங்கள் கட்சி, அரசு உள்ளது. எதிர்க்கட்சியும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக போலீஸ் மந்திரி உறுதி அளித்துள்ளார். இதில் உண்மைகள் வெளிவரும். இந்த சதித்திட்டத்தை கண்டு எனது தொகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்