மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி?
பிரதமர் மோடியை தேவேகவுடா சந்தித்து பேசிய நிலையில் கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: பிரதமர் மோடியை தேவேகவுடா சந்தித்து பேசிய நிலையில் கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமாரசாமி முடிவு செய்வார்
கர்நாடக மேல்-சபையில் உள்ளாட்சி அமைப்புகளால் நிரப்பப்படும் 25 தொகுதிகளுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) போட்டியிடாத தொகுதிகளில் அக்கட்சியின் ஆதரவை பா.ஜனதாவுக்கு வழங்குமாறு கேட்பேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தேவேகவுடா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ஐ.ஐ.டி. கல்லூரியை ஹாசனில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது மட்டுமின்றி கர்நாடகத்தில் நடைபெற உள்ள மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவேகவுடா, ஜனதா தளம் (எஸ்) போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து குமாரசாமி முடிவு செய்வார் என்று கூறினார்.
ஆலோசித்து முடிவு
இந்த நிலையில் இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைப்பது குறித்து எடியூரப்பாவும், குமாரசாமியும் ஆலோசித்து இறுதி முடிவு செய்வார்கள். பிரதமர் மோடியுடன் தேவேகவுடா சந்தித்தபோது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு உள்ளது.
இந்த மேல்-சபை தேர்தல் கூட்டணி விவகாரம் உள்ளூர் தலைவர்களுக்கு விடப்பட்டுள்ளது" என்றார்.ஜனதா தளம் (எஸ்) தான் போட்டியிடும் 6 தொகுதிகளை தவிர்த்து மற்ற 19 தொகுதிகளில் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராக உள்ளது. ஆனால் அக்கட்சி தலைவர்கள் அதிகாரபூர்வமாக தங்களை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்று ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பா.ஜனதாவை ஆதரிக்க முடியும்
ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "எங்கள் கட்சி பா.ஜனதாவை ஆதரித்தால், ஜனதா தளம் (எஸ்) போட்டியிடும் தொகுதிகளில் பா.ஜனதா ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை தானே. நிலைமை எவ்வாறு போகிறது என்பதை பார்ப்போம். எந்தெந்த தொகுதிகளில் பா.ஜனதாவை ஆதரிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். வரும் தேர்தலை மனதில் கொண்டு முடிவு எடுக்க வேண்டியுள்ளது" என்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்-மந்திரி ஆனார். அதன் பிறகு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.