சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
சேலம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் சேலத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்து நடந்து சென்றார்.
முன்னதாக ஊர்வல தொடக்கத்தின் போது அவர் பேசியதாவது:-
எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவித்து உள்ளது. அதன்படி எச்.ஐ.வி. தொற்றுள்ள மக்களுக்கு முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
8,394 பேருக்கு சிகிச்சை
தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டத்தில் தான் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோர்களுக்கான கூட்டு மருந்து சிகிச்சை அதிகமானவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி மொத்தம் 8 ஆயிரத்து 394 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களை சமூகம், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒதுக்காமல், அவர்கள் மீது அன்பு செலுத்தி சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும். மேலும் எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து முழுமையான தகவலை தெரிந்து கொண்டு தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக எய்ட்ஸ் தடுப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள், நர்சுகள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.