பாவூர்சத்திரம் அருகே லாரி உரசியதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது
பாவூர்சத்திரம் அருகே லாரி உரசியதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது
பாவூர்சத்திரம், டிச.2-
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளிட்ட பல ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு மூலப்பொருட்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு மூலப்பொருட்கள் கொண்டு வரும் லாரிகளில் அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வருகின்றனர். அப்படி நேற்று ஆவுடையானூரில் உள்ள ஆலை ஒன்றிற்கு அதிகப்படியான பொருட்களை ஏற்றி வந்த லாரி உரசியதில் ஆவுடையானூரில் மின்கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தினர். புதிய மின் கம்பம் கொண்டுவந்து அந்த இடத்தில் நட்டு மின் வினியோகத்தை சீர் செய்தனர். துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கிராமங்களுக்கு உள்ளே இதுபோன்ற அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கவனமாகவும், மின் வயர்கள் இருக்கிறதா என்று பார்த்து வர வேண்டும். இதுபோல் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.