தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் பழவத்தான்கட்டளை பகுதி உள்ளது. இந்த சாலை போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இப்பகுதியில் ரேஷன் கடை அருகில் அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டுவதற்காக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த குப்பைத்தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குப்பைகளை அந்தபகுதி மக்கள் குப்பைத்தொட்டியில் கொட்டாமல் சாலையோரம் கொட்டி வருகின்றனர். மேலும் அந்த குப்பைகளை கால்நடைகள் கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று குப்பைத்தொட்டிகள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பழவத்தான் கட்டளை, கும்பகோணம்.
வழிந்தோடும் கழிவு நீர்
தஞ்சை மாநகராட்சி 4-வது வார்டில் கொடிக்காலூர் கிழக்கு பகுதியில் பாதாள சாக்கடை ஆழ்நுழைவு தொட்டி உள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள குடிநீர் குழாயை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் பிடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
-கோவிந்தராஜன், கொடிக்காலூர், தஞ்சாவூர்.