கயிறு கட்டி கடக்கும் மக்கள்
வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் கயிறு கட்டி கிராம மக்கள் கடக்கின்றனர்.
கமுதி,
வைகை அணையில் இருந்து கடந்த 27-ந் தேதி முதல் 12 ஆயிரம் கனஅடி வீதம் பார்திபனூருக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதையடுத்து பார்த்திபனூரில் இருந்து 5,600 கன அடி தண்ணீர் கமுதியில் உள்ள பரளை ஆறுக்கு திறக்கப்பட்டு தண்ணீர் செல்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கமுதி அருகே செய்யாமங்கலம் கிராம தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் செய்யா மங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் உள்ளிட்ட 5 கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் கயிறு கட்டி தரைப்பாலத்தில் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான நிலையில் கடந்து சென்று வருகின்றனர். மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து செல்வதால் அன்றாட வேலைக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தொண் டர்கள், மேலக்கொடுமலூர் ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் கிராம பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளி நேரங்களில் சுமந்து சென்று வெள்ளத்தை கடந்து பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி வைத்துவருகின்றனர்.