ஏரிக்கரை உடைந்து விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் சாலை மறியல்
சோளிங்கரை அடுத்த கரிக்கல் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள்
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த கரிக்கல் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சாலை மறியல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கரிக்கல் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்குபிறகு ஏரி நிரம்பி கோடி போகிறது. ஏரியின் மதகுகள், கரைகள், ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது நிரம்பியுள்ள ஏரி கரையில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இதனால் நீர் வீணாக வெளியேறுகிறது.
இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சோளிங்கர்-அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் கரிக்கல் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் மற்றும் கொண்ட பாளையம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி பஸ்களும் ஒரு மணி நேரம் காத்திருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி சம்பந்தப்பட்ட கரிக்கல் ஏரிக்கு சென்று கரை உடைந்த பகுதி மற்றும் கடைவாசல் வெள்ளப்பெருக்கு பகுதிகளை பார்வையிட்டார். சேதமான பகுதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.