‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம்
பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் ஊராட்சி 8-வது வார்டு இந்திரா காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளை அதன் அருகிலேயே துப்புரவு பணியாளர்கள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமுருகன், ஜெயமங்கலம்.
சேதமடைந்த நிலையில் மின்கம்பம்
வேடசந்தூர் தாலுகா அம்மாபட்டி ஊராட்சி புதுப்பட்டி மயானம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள 2 மின்சார பெட்டிகளும் சேதமடைந்துள்ளன. அந்த பெட்டிகள் மூலம் தான் அங்குள்ள விவசாய தோட்டங்களுக்கான மின்இணைப்பு கொடுக்கப்படுகிறது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பம், மின்பெட்டிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நந்திவேல், புதுப்பட்டி.
குண்டும், குழியுமாக மாறிய சாலை
தேனியை அடுத்த சின்னமனூர் நகராட்சி கச்சேரிகாமு தெருவில் பேவர் பிளாக் கற்கள் மூலம் போடப்பட்ட சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
உறுதி தன்மையை இழந்துவரும் பாலம்
தேனியை அடுத்த சின்னமனூர் நகராட்சியில் உள்ள சாமிகுளத்தில் இருந்து தண்ணீர் செல்லும் பி.டி.ஆர். வாய்க்காலின் குறுக்காக கட்டப்பட்ட பாலம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து அதன் உறுதி தன்மையை இழந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகன்யா, சின்னமனூர்.
சாலை வசதி செய்யப்படுமா?
பழனி பாரதிநகரில் சாலை வசதி செய்யப்படாததால் மழைக்காலங்களில் தெருவில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் அந்த இடமே சகதிகாடாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பாரதிநகரில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அறிவாசான், மானூர்.
--------