துணை ராணுவ வீரர் தந்தை படுகொலை; வாலிபர் கைது
துணை ராணு வீரர் தந்தை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோபால்பட்டி:
கோபால்பட்டி அருகே உள்ள கே.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 63). இவர், கணவாய்பட்டி ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் ராஜா. இவர், சென்னையில் சி.ஆர்.பி.எப். (துணை ராணுவ படை) பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பெரியதம்பி, தனது வீட்டில் கட்டிலில் படுத்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெரியதம்பியின் பக்கத்து வீட்டில் வசிக்கிற சென்ட்ரிங் தொழிலாளி குமரவேல் (27) என்பவருக்கும், பெரியதம்பிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குமரவேலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பெரியதம்பியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பெரியதம்பி, குமரவேலின் குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த குமரவேல் அங்கிருந்த செம்பால் பெரியதம்பியை முகத்தில் சரமாரியாக தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குமரவேலை போலீசார் கைது செய்தனர்.