விருத்தாசலத்தில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலத்தில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-12-01 16:31 GMT
விருத்தாசலம். 

10 பவுன் நகை

விருத்தாசலம் அரசு அச்சகம் அருகே உள்ள ஆர்.டிஆர் நகரை சேர்ந்தவர் ஆனந்தமணி (வயது 87). விருத்தாசலம் ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மங்கையர்க்கரசி (80). இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்துவிட்டு  கணவன்-மனைவி இருவரும் வீட்டின் முன்பகுதியில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். 
இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மங்கையர்க்கரசியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த மங்கையர்க்கரசியின் மகன்கள் விரைந்து வந்து மர்மநபரை பிடிக்க முயன்றனர். 

ரூ.3½ லட்சம்

ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்.  இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்