வால்பாறையில் காபி பழங்கள் அறுவடை தொடங்கியது
வால்பாறையில் காபி பழங்கள் அறுவடை தொடங்கியது
வால்பாறை
வால்பாறையில் காபி பழங்கள் அறுவடை தொடங்கி உள்ளது.
காபி சாகுபடி
மலைப்பிரதேசமான வால்பாறையில் தேயிலை, காபி, மிளகு, ஏலக்காய் ஆகிய பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகளவில் தேயிலையும், குறைந்தளவில் காபியும் பயிரிடப்பட்டு இருக்கிறது.
வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்து 677 எக்டேர் பரப்பில் காபி சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் காபி செடிகளில் கடந்த மார்ச் மாதம் பூக்கள் பூக்க தொடங்கின.
அறுவடை தொடங்கியது
தொடர்ந்து பூக்களில் இருந்து காய்கள் பிடித்து, அந்த பழங்கள் தற்போது பழுத்து அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து தொழிலாளர்கள் தற்போது அந்த பழங்களை அறுவடை செய்து வருகிறார்கள்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
காபி செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். இதனால் பலர் ஆண்டு முழுவதும் மகசூல் கொடுக்கும் தேயிலை பயிருக்கு மாறிவிட்டனர். தற்போது காபி பழங்களை அறுவடை செய்து வருகிறோம்.
பிப்ரவரி வரை நீடிக்கும்
ஒரு செடியில் அதிகபட்சமாக ஒரு கிலோ முதல் 2 கிலோ பழங் கள் கிடைக்கும். இந்த பழங்களை காய வைத்து அதில் இருந்து காபி கொட்டைகள் எடுத்து அவற்றை காபி தூள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படும்.
இந்த காபி பழம் பறிக்கும் பணி வருகிற பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். அதன் பின்னர் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் பழங்கள் பறிக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.