களை செடிகளை கண்டறிவது குறித்து மாணவர்களுக்கு கருத்தரங்கம்
களை செடிகளை கண்டறிவது குறித்து மாணவர்களுக்கு கருத்தரங்கம்
ஊட்டி
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் களை தாவரங்களை கண்டறிவது குறித்து மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.
களை செடிகள்
ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனவிலங்கு உயிரியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அந்நிய களை செடிகளை கண்டறிந்து பதிவு செய்வது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ- மாணவிகளுக்கான கருத்தரங்கம் கல்லூரியில் தொடங்கியது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, நீலகிரியில் களை செடிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை. வனநிலங்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 100 யூகலிப்டஸ் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக சோலை மரக்கன்றுகள் நடவு செய்து, தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
விழிப்புணர்வு அவசியம்
வனவிலங்கு உயிரியல் துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேசும்போது, நீலகிரி மாவட்டம் உயிர்ச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மண்டலம் ஆகும்.
இங்குள்ள வனப்பகுதிகளில் சோலை மரங்கள், செடி, கொடிகள் உள்ளது. மேலும் பவானி, மாயாறு என 2 ஆறுகள் இருக்கின்றன. அழியும் பட்டியலில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய களை செடிகள் உள்ளது. இதை அறிந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார்.
இயற்கை சுற்றுச்சூழல்
திட்ட ஒருங்கிணைப்பாளர் மிலிந்த் பன்யன் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சுற்றுச்சூழலுக்கு அந்நிய களை செடிகள் அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே எவை, எவை களை செடிகள் என்று அறிந்திருக்க வேண்டும்.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் மரங்கள், புதர் செடிகள், தாவரங்கள், புற்கள் என முக்கியமான 27 வகை களை செடிகள் அதிகளவு காணப்படுகிறது. லண்டானா, சீகை உள்ளிட்ட களை செடிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக உள்ளது.
களை செடிகள் குறித்த மேப்பிங் வனத்துறையின் தரவுகளை சார்ந்து இருக்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு இனங்கள் பரவுவதை பட்டியலிடுவது மிகவும் கடினம் ஆகும். முதல் கட்டமாக பவானி, மாயாறு நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு இனங்களை வரைபடமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.
கருத்தரங்கு இன்று (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. இதில் விலங்கியல் துறை தலைவர் எபினேசர், வனவிலங்கு உயிரியல்துறை தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.