விச்சூர் ஊராட்சியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

மீஞ்சூர் அடுத்த விச்சூர் ஊராட்சியில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் படகில் பயணம் செய்ய ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2021-12-01 08:09 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆறு சீமாபுரம், கவுண்டர்பாளையம், வெள்ளிவாயல், மணலிபுதுநகர், நாப்பாளையம் வழியாக செல்கிறது. இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

கடந்த 19-ந்தேதி வெள்ளிவாயல் கிராமத்தின் வழியாக செல்லும் கரை உடைப்பு ஏற்பட்டதால் விச்சூர் ஊராட்சியில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

மேலும் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் மணலி புதுநகர், சடையங்குப்பம் வழியாக எண்ணூர் கடலில் கலந்து வரும் நிலையில் வெள்ளம் வடியாமல் உள்ளது.

இதனால் விச்சூர் ஊராட்சியில் உள்ள எழில் நகர், கணபதி நகர், ஐ.ஜே.புரம், ஸ்ரீராம் நகர் உள்பட 16 நகர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. மீஞ்சூர் அருகே வல்லூர் அணைக்கட்டில் 38 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் தொடர்ந்து வீடுகளில் மழைநீர் 4 அடி உயரத்திற்கு தேங்கி உள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான உணவு பொருட்களான 5 கிலோ அரிசி, ரொட்டி போன்றவற்றை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் படகில் சென்று வீடு வீடாக வழங்கி வருகிறார். பொதுமக்கள் படகு மூலம் பயணம் செய்ய ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் செய்திகள்