ஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்தில் சிக்கி 4 ஆயிரம் வாத்து குஞ்சுகள் உயிரிழந்தன
ஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்தில் சிக்கி 4 ஆயிரம் வாத்து குஞ்சுகள் உயிரிழந்தன.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 40). இவரது மனைவி ருக்கு (36). இவர்கள் இருவரும் வாத்து குஞ்சுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். மாம்பாக்கம் ஏரிக்கரையில் கூடாரம் அமைத்து வாத்து குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர். 6 மாதங்கள் வளர்ந்த வாத்துகளை விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் 2½ மாதங்கள் ஆன 4 ஆயிரம் வாத்து குஞ்சுகள் வளர்ந்து வந்தன.
வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி முழுவதுமாக நிரம்பியது. நேற்று முன்தினம் மாலை அதிக அளவில் உபரிநீர் வெளியேறியதால் வாத்து குஞ்சுகள் வளர்த்து வரும் கூடாரத்தில் வெள்ளம் பாய்ந்தது. இதனால் வெள்ளத்தில் மூழ்கி 4 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் உயிரிழந்தன. இதுகுறித்து மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் காயத்ரி லட்சுமிகாந்தன் தலைமையில் முனுசாமி ஆகியோர் ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் மற்றும் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கோவிந்தசாமி, சுதாகர்பாண்டியன் ஆகியோர் கால்நடை டாக்டர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வாத்து குஞ்சுகளுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.