மாம்பாக்கத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் மாயம்
மாம்பாக்கம் கிராமத்தில் ஓடையை கடக்க முயன்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை செட்டி தெருவை சேர்ந்தவர் ஷியாம்சுந்தர் (வயது 22). இவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாம்பாக்கம் வழியாக திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மாம்பாக்கம்-வேலகாபுரம் சாலையில் உள்ள ஓடையை கடக்க முயன்ற போது நிலைதடுமாறி ஓடையில் தவறி விழுந்தார். இதைப் பார்த்த கிராம மக்கள் ஓடிச்சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இது பற்றி தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார், தீயணைப்பு துறை மற்றும் மீட்புப்படை வீரர்களுடன் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.