விக்கிரமசிங்கபுரம் அருகே குளங்கள் நிரம்பி வயலுக்குள் புகுந்த வெள்ளம் மீன் பிடித்து வாலிபர்கள் மகிழ்ந்தனர்
குளங்கள் நிரம்பி வயலுக்குள் புகுந்த வெள்ளம்
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே கல்சுண்டு காலனியில் குளங்கள் நிரம்பி வயல்வெளிகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளநீரில் மீன்களை ஆர்வமுடன் வாலிபர்கள் பிடித்து மகிழ்ந்தனர்.
குளங்கள் நிரம்பின
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணைக்கு வரக்கூடிய உபரி நீர் அதிகளவில் வெளியற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி மறுகால் பாய்கின்றது.
இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கல்சுண்டு காலனி பகுதியில் நொச்சிக்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. மேலும் குளத்தில் இருந்து மீன்கள் விவசாய நிலங்களில் புகுந்ததால் அப்பகுதி வாலிபர்கள் வயலில் இறங்கி மீன்களை பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. இதில் நாங்கள் 2 நாட்களுக்கு முன்பு தான் நாற்று நடவு செய்து இருந்தோம். தற்போது பெய்த கனமழை காரணமாக நாற்று எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
..............