செங்கல் அணை தரைப்பாலம் இடிக்கப்பட்டு ரூ.1½ கோடியில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை

செங்கல் அணை தரைப்பாலம் இடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூறினர்.

Update: 2021-11-30 20:31 GMT
சேலம்,
தரைப்பாலம்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை பகுதியில் செங்கல் அணை உள்ளது. மழை அதிகமாக பெய்யும் போது அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் அதிகமாக ஓடும். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இதைத்தொடர்ந்து இந்த தரைப்பாலத்தை நேற்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை பகுதியில் செங்கல் அணை தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் விவசாய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், மூக்கனேரி, அணைமேடு, குமரன்நகர், புதுகாலனி பகுதியை சார்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உயர்மட்ட பாலம்
இந்த நிலையில் மழைக்காலங்களில் சீலாவரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் செங்கல் அணை நிரம்பி வெளியேறும் தண்ணீரால் தரை மட்ட பாலத்திற்கு மேல் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுகிறது. அதன்படி தற்போது பெய்து வரும் மழையால் இந்த பாலத்தின் மேல் பலமுறை தண்ணீர் சென்றது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 
தரைப்பாலத்தை, உயர்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டுவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தரைப்பாலத்தை இடித்து விட்டு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்படும். அதன்படி 18 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் அமைய உள்ளது. மேலும் 23 மீட்டர் நீளத்திற்கு 2 புறமும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட உள்ளது.
அடிப்படை வசதிகள்
மேலும் குமரன் நகர், புதுகாலனி ஆகிய பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர். அதன்படி 2 இடங்களில் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கபிலர் தெருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின் போது மாநகராட்சி என்ஜினீயர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், செயற்பொறியாளர் லலிதா உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்