போலீசார் சோதனையில் பெங்களூரு சிறையில் கஞ்சா, ஆயுதங்கள் சிக்கன

மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கஞ்சா, ஆயுதங்கள் சிக்கின. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Update: 2021-11-30 20:10 GMT
பெங்களூரு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கஞ்சா, ஆயுதங்கள் சிக்கின. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

லஞ்சம் வாங்கிய வீடியோ

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவும் இதே சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது.

அதாவது கைதிகளிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கைதிகளிடம், சிறை அதிகாரிகள் பணம் வாங்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பணம் கொடுக்காத கைதிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் சிறை ஊழியர்கள் ஈடுபடுவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி இருந்தனர்.

போலீசார் சோதனை

இதற்கிடையே பெங்களூரு நகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபடியே திட்டம் தீட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார். இந்த சோதனையில் 2 துணை போலீஸ் கமிஷனர்கள், 3 உதவி போலீஸ் கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் இருந்தனர்.

நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 9 மணி வரை 3 மணி நேரம் நடந்து இருந்தது. கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறையில் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கஞ்சா பொட்டலங்கள், அதை புகைக்க பயன்படுத்தப்படும் 7 குழாய்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்