பெண் துணை கலெக்டரின் வீடு, பள்ளியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், பெண் துணை கலெக்டரின் வீடு, பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் பள்ளியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
ஸ்ரீரங்கம்,
திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தொழில் அதிபர். இவரது மனைவி பவானி. இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் நீதிமன்றத்தின் தனித்துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஹர்ஷவரதன் லால்குடி அருகே உள்ள வாளாடியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். மேலும் மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.வி.ஆர். பள்ளியில் ஒரு பங்குதாரராகவும் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார்.
இந்த நிலையில் துணை கலெக்டரான பவானி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணி முதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் போலீசார் 3 குழுக்களாக பிரிந்து ஸ்ரீரங்கம் நெல்சன் ரோட்டில் உள்ள பவானிக்கு சொந்தமான வீடு, லால்குடி அருகே வாளாடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், மண்ணச்சநல்லூரில் உள்ள பள்ளிக்கூடம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
வீட்டிற்குள் சோதனைக்கு சென்றதும் அங்கிருந்தவர்களின் செல்போன்களை கைப்பற்றினர். வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 8 மணி நேரத்துக்கு மேலாக, நடந்த இச்சோதனை மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. மேலும் அவரது வங்கி கணக்குகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர். அத்துடன் பவானிக்கு டேங்கர் லாரிகள் பல உள்ளதும், கொடைக்கானலில் பண்ணை வீடு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பவானி, ஏற்கனவே ஸ்ரீரங்கம் தாசில்தாராகவும், அதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலால் உதவி ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் அவர் மன்னார்குடி வருவாய் நீதிமன்ற துணை கலெக்டராக பணியமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையின் போது துணை கலெக்டர் பவானி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், தொடந்து வந்த ஊழல் புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பவானியின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டு தொடர்ந்து நடைபெறும் விசாரணைகள், ஆய்வுகள் மற்றும் ஆடிட்டிங் சரிபார்ப்பு பணிகளுக்குப் பின்னர் சொத்து மதிப்பு, ரொக்கம், நகைகள் குறித்து கணக்கிடப்பட்டு, வருமானத்துக்கு கூடுதலாக சொத்து அல்லது ரொக்கம், நகைகள் இருப்பது தெரியவந்தால், அதன் பின்னர் அவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.