விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ.30 கோடியில் உயர்மட்ட மேம்பாலம். அமைச்சர் எ.வ.வேலு தகவல்
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ.30 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ.30 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ரூ.30 கோடியில் மேம்பாலம்
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை விரிஞ்சிபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை பாலாற்றில் பெருவெள்ளமாக ஓடியது. இதனால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் உடைந்து சேதம் ஆனது.
இந்த பாலம் 322 மீட்டர் நீளமுடையது. இதில் சுமார் 80 மீட்டர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீரின் வேகம் குறைந்த பின்னர் தற்காலிக போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். மேலும் ரூ.30 கோடி மதிப்பீட்டில் இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.1,444 கோடி வழங்க கோரிக்கை
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,281 தரை பாலங்களில் 648 பாலங்கள் உயர்மட்ட பாலமாக மாற்றப்படும். மழைவெள்ள சேத பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் உள்ளதால் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
தற்காலிகமாக ரூ.1,444 கோடி மத்திய அரசிடம் நிவாரணத் தொகையாக கேட்டுள்ளோம். தற்காலிகமாக நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி நிதியிலிருந்து நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பணையுடன் கூடிய பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வில் உள்ளது. ஆய்வின் முடிவில் சாத்தியமாக அமைந்தால் அவ்வாறு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் வேலூர் மாங்காய்மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாயை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.