பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய இன்று முதல் அனுமதி
பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 7 கொங்கு சிவதலங்களில் பிரசித்தி பெற்றது பவானி கூடுதுறை. சிறந்த பரிகார தலமான இங்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்வார்கள். மேலும் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்வார்கள். இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்குள் சென்று வழிபடவும், கூடுதுறையில் பரிகாரம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் கூடுதுறையில் பாிகாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மீண்டும் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து மீண்டும் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய இன்று (புதன்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராட தடை நீடிக்கிறது.
பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பவானி கூடுதுறையை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.