கடலூர் அருகே மலட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்

தேடும் பணி தீவிரம்

Update: 2021-11-30 17:21 GMT
நெல்லிக்குப்பம், 
புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் பாபா(வயது 16). புதுச்சேரி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்கள் 5 பேருடன் குளிப்பதற்காக கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் மூர்த்திக்குப்பம் மலட்டாற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டுக்கு வந்தார். பின்னர் பாபா தனது நண்பரான குணால் என்பவருடன் அணைக்கட்டில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். மற்ற நண்பர்கள் கரையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது பாபா, குணால் ஆகியோர் அணைக்கட்டில் இருந்து ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட இருவரும் மீன் பிடிக்க ஆற்றில் விரிக்கப்பட்டிருந்த வலையை பிடித்து கரையேற முயன்றனா். அப்போது வலை அருகே நின்ற மீனவர் உதவியுடன் குணால் கரையேறினார். அந்த சமயத்தில் வலை திடீரென அறுந்ததால், பாபா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி பாபாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த பாபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதறி அழுதனர். மேலும் மாணவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அணைக்கட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்