திருக்கோவிலூர் அருகே ஆற்று வெள்ளத்தில் காருடன் அடித்து செல்லப்பட்ட டிரைவர் தேடும் பணி தீவிரம்
திருக்கோவிலூர் அருகே கெடிலம் ஆற்று வெள்ளத்தில் காருடன் டிரைவர் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிளியூரை சேர்ந்தவர்கள் கேசவன் மகன் கிளியான், சிவலிங்கம் மகன் சங்கர் ஆவார்கள். அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது தந்தை உளியான் என்பவர் இறந்து விட்டார்.
எனவே இவரது இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து வரும் உறவினர்களை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் திருக்கோவிலூருக்கு கிளியான், சங்கர் ஆகியோர் புறப்பட்டனர்.
இதற்காக காசிலிங்கம் மகன் முருகன் என்பவரது வாடகை காரில், திருக்கோவிலூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அடித்து செல்லப்பட்ட கார்
இதற்கிடையே திருக்கோவிலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கெடிலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மொகலார் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இரவு நேரம் என்பதால், தண்ணீர் எந்த அளவுக்கு செல்கிறது என்பது தெரியாமல், அந்த வழியாக அவர்கள் காரில் கடந்து செல்ல முயன்றனர்.
இதற்கிடையே அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள், தரைப்பாலத்தின் வழியாக செல்ல வேண்டாம் என்று கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் அதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தரைப்பாலத்தின் வழியே சென்றபோது, கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
தேடும் பணி தீவிரம்
உடன் அங்கிருந்தவர்கள் கிளியானை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். மற்ற இருவரும் காருடன் சேர்ந்தே சென்றுவிட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே சங்கரும், வெள்ளத்தில் நீந்தி கரைக்கு திரும்பினார்.
ஆனால் முருகன் மட்டும் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நேற்று முழுவதும் நடைபெற்றது. இதில் டிரோன் கேமரா மூலமாகவும் ஆற்று பகுதி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை வரை அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் மொகலார் கிராமத்துக்கு நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் மீட்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினரிடம் கேட்டறிந்த அவர், முருகனை மீட்கவும் அறிவுரை கூறினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தின் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இங்கு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
இதை கேட்டறிந்த அவர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அழைத்து, இந்த தரைப்பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யும்படி கூறினார்.
ரூ.10 கோடியில் பாலம்
தொடர்ந்து ரூ.10 கோடி செலவில் மேம்பாலம் கட்ட தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டு இருப்பதாகவும், அதற்கு அவர் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று, மேம்பாலம் கட்ட விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.
அப்போது அவருடன் திருக்கோவிலூர் ஒன்றிய குழு தலைவர் அஞ்சலாட்சிஅரசகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.