மலைப்பாதையில் மண்சரிவு
பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
நேற்று மதியம் 12 மணி அளவில், பெரும்பாறை-சித்தரேவு மலைப்பாதையில் உள்ள முருகன் கோவில் அருகே மண் சரிந்து விழுந்தது. இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் மலைப்பாதையில் விழுந்த மண்ணை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல் தடியன்குடிசை பகுதியில் மாலை 5 மணி அளவில் மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.