‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்தவர் அமலதாஸ். அந்த கிராமத்துக்கு இயங்கி வந்த பஸ் (தடம் எண் 308) கடந்த 1½ ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அந்த பஸ்சை மீண்டும் இயக்கக்கோரியும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அவர் அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக, அந்த பஸ் மீண்டும் இயக்கப்படுகிறது. இதற்காக ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
வடிகால் வசதி தேவை
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தாரக்கடை தெருவில் மழைநீர் செல்வதற்கு வடிகால் வசதி இ்ல்லை. இதனால் அப்பகுதி மக்களே சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஜெகன், சேரன்மாதேவி.
வீணாகும் குடிநீர்
நெல்லை மாநகராட்சி 38-வது வார்டு கருப்பன்துறையில் இடுகாட்டுக்கு எதிரே குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலுவை ராஜூ, கருப்பந்துறை.
சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை எதிரே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சில நாட்களாக சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்குள்ள நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏற நிற்கும் பயணிகள் கழிவுநீரை மிதித்து தான் செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மா.அந்தோணிராஜ், குலவணிகர்புரம்.
சுகாதாரக்கேடு
ராதாபுரம் தாலுகா லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சாலையில் தண்ணீரோடு சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
சிக்னல் விளக்கை மறைக்கும் மரக்கிளைகள்
தென்காசி குற்றாலம் விலக்கு பகுதியில் போக்குவரத்து சிக்னல் செயல்பட்டு வருகிறது. இங்கு போக்குவரத்து காவலர் கூண்டு அருகே சாலையோரத்தில் உள்ள மரத்தின் கிளைகள் அடர்ந்து வளர்ந்து, போக்குவரத்து சிக்னல் கம்பத்தை மறைத்துள்ளது. இதனால் தென்காசி போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்காசி பழைய பஸ்நிலையம் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் விளக்குகள் எரிவது தெரிவதில்லை. சிக்னல் பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, சிக்னல் விளக்கை மறைத்தவாறு வளர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
அம்ஜத், முதலியார்பட்டி.
கொசு தொல்லை
கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தங்கம்மன் கோவில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு தற்போது கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள், குழந்தைகள் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. எனவே, கொசு மருந்து புகை அடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்குமரன், கடையம்.
திறந்து கிடக்கும் மின்இணைப்பு பெட்டி
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் காமராஜர் சிலை எதிரே மின்கம்பத்தில் உள்ள தெரு மின் இணைப்பு பெட்டி மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. பெட்டிக்குள் ஒயர்கள் தொங்குகிறது. சிறுவர்-சிறுமிகள் தொடும் நிலையில் உள்ளதால், மழைக்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.டி.டெக்கான், கீழக்கலங்கல்.
தாகம் தீர்க்குமா குடிநீர் தொட்டி?
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஸ்நிலையத்தின் உள்ளே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் நிரப்பப்படவில்லை. திறந்து மூடுவதற்கு குழாயில் நல்லியும் இல்லை. பயணிகளின் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி வெறும் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே, குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பி பயணிகள் தாகம் தீர்த்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
ஏ.வி.பி.மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
சேறும் சகதியுமாக மாறிய தெரு
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி மேற்கு 2-வது தெருவில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மணிகண்டன், தூத்துக்குடி.