பழைய மாமல்லபுர சாலையில் கால்வாய் அமைக்க கோரிக்கை மனு

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் சிறப்பு கண்காணிப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரராகவராவை சந்தித்து செம்மஞ்சேரி பகுதி மக்கள் பழைய மாமல்லபுர சாலையில் கால்வாய் அமைக்க கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2021-11-30 12:13 GMT
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மஞ்சேரி, ஜவஹர் நகர், எழில்முகநகர், மஹாநகர், காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகள் வருடந்தோறும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 25 ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரானது இந்த பகுதிகளை கடந்து 25 கிலோமீட்டர் சுற்றியே பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுகாடு முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கிறது. எனவே பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர், நாவலூர் மற்றும் குமரன் நகர் பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பட்சத்தில் மழைவெள்ளம் 3 கிலோமீட்டரில் பக்கிங்காம் கால்வாயில் கலந்துவிடும்.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும். எனவே, அடுத்த ஆண்டுக்குள் இதற்கான பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் சிறப்பு கண்காணிப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரராகவராவை சந்தித்து அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்