மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் முதியவர் மரணம் - மும்பைக்கு 2 மணி நேரம் தாமதம்
மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் முதியவர் இருக்கையிலேயே பயணி இறந்து விட்டதால் மும்பைக்கு 2 மணி நேரம் தாமதம் புறப்பட்டு சென்றது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு மதுரையில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு விமானம் வந்தது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உள்பட 93 பயணிகள் வந்தனர். அந்த விமானம், சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு செல்ல வேண்டும்.
சென்னையில் சில பயணிகள் இறங்கியதும், மும்பைக்கு செல்ல வேண்டிய பயணிகள் விமானத்தில் ஏறவேண்டும். ஆனால் சென்னையில் இறங்க வேண்டிய ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை என தெரியவந்தது. உடனே விமான பணிப்பெண்கள் சென்று பார்த்தபோது மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 72) என்ற முதியவர் இருக்கையில் படுத்து இருப்பதை கண்டனர். அவரை பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அங்கு மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்தபோது, முதியவர் சண்முகசுந்தரம் விமானம் நடுவானில் பறந்து வந்தபோதே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து விமான நிலைய போலீசார் சண்முகசுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரையில் இருந்து சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தபோது சண்முகசுந்தரம் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விமான இருக்கையிலேயே பயணி இறந்து விட்டதால் விமானத்தில் இருந்த மும்பை செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் விமானத்தை சுத்தம் செய்த பிறகு சுமார் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.