வள்ளியூரில் வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

Update: 2021-11-29 22:26 GMT
வள்ளியூர்:
வள்ளியூரில், வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வியாபாரி
வள்ளியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மேற்கு பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் சுரேஷ் (வயது 42). இவர் வீட்டு மளிகை பொருட்கள் ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கினார். நேற்று காலையில் சுரேஷ் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கொள்ளை
பின்னர் பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சாவியை எடுத்து திறந்து உள்ளே இருந்த 7 பவுன் தங்க நகைகளையும், ரூ. 97 ஆயிரத்தையும் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அருகில் உள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி  மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்