16 ஆண்டுகளுக்கு பிறகு களரம்பட்டி ஏரி நிரம்பியது
16 ஆண்டுகளுக்கு பிறகு களரம்பட்டி ஏரி நிரம்பியுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 65 ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் அருகே 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட களரம்பட்டி பெரிய ஏரி நேற்று முன்தினம் நிரம்பி அம்மாபாளையத்தில் உள்ள கடைக்கால் வழியாக உபரிநீர் அருகே உள்ள ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு களரம்பட்டி பெரிய ஏரி நிரம்பியதால் உற்சாகமடைந்த களரம்பட்டி, அம்மாபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களுடன் சேர்ந்து ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள வரகுபாடி அம்மனுக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி ஊர்வலமாக ஏரிக்கு சென்று தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். மேலும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.