குடியிருப்புகள், பள்ளியை சூழ்ந்த மழைநீர்
குடியிருப்புகள், பள்ளியை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு செங்குந்தபுரம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கீழண்ட ஏரி நிரம்பியது. இதன் உபரிநீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததன் காரணமாக, ஏரியில் பெருக்கெடுத்த வெள்ளநீரானது, செங்குந்தபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியை சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது. தற்போது முழங்கால் அளவிற்கு தண்ணீரானது பள்ளியை சூழ்ந்து இருப்பதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் பள்ளிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும், விளையாட்டு மைதானத்திலும் ஏரியைப்போல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கு செங்குந்தபுரம் கீழண்ட ஏரியின் வடிகாலை சீரமைக்காததே முக்கிய காரணம் என்றும், இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் கருதி பள்ளியில் தேங்கிய மழைநீரை அகற்றி வடிகாலை சீரமைத்து, சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை பரிசோதனை செய்த பிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், தாசில்தார் ஆனந்தன், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி ஆகியோர் நேரில் சென்று, உடனடியாக வடிகால் அமைத்து தர உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் உடனடியாக இரண்டு புறங்களிலும் பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால் வாய்க்கால் வெட்டப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் குறையாமல் இருக்கும் பட்சத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.