ஆலங்குளத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
ஆலங்குளத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே பரும்பு குறிஞ்சி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. நாங்கள் அங்கு வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களது பகுதிக்கு செல்லும் பொதுப்பாதையை சிலர் வழிமறித்து அடைத்துள்ளனர். இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட வந்து செல்ல முடியவில்லை’ என்று தெரிவித்தனர்.
அவர்களிடம் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பரும்பு குறிஞ்சி நகருக்கு சென்ற அதிகாரிகள், அங்கு பொதுப்பாதையை திறந்து விட்டனர்.