எல்லை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற காவலருக்கு ரூ1 லட்சத்திற்கான காசோலை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்
எல்லை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற காவலருக்கு ரூ1 லட்சத்திற்கான காசோலையை தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
தர்மபுரி:
எல்லை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற காவலருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
இலவச வீட்டு மனை
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் பென்னாகரம் தாலுகா செல்லமுடி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கூலி வேலை செய்யும் ஏழை-எளிய தொழிலாளர் குடும்பங்கள் சாலை ஓரத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
காரிமங்கலம் தாலுகா கொங்கரபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கால்சானூர் முதல் வடகாசி வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் சாலை புதுப்பிக்கும் பணி நிலுவையில் உள்ளது. தொடர் மழையால் சேறும் சகதியுமாக காணப்படும் இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
எல்லை காவலருக்கு ரூ.1 லட்சம்
குறை தீர்க்கும் கூட்டத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு எல்லையை பாதுகாக்க எல்லை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த எல்லை காவலர் கிருஷ்ணசாமிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதேபோல் 9 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.89.50 லட்சம் கடனுதவியை கலெக்டர் வழங்கினார்.
தடுப்பூசி
2019-ம் ஆண்டில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான பாராட்டு கேடயத்தை தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரனுக்கு கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையினர் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.