பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து 4 பேர்
கறம்பக்குடி பஸ் நிலையத்தில் உள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து 4 பேர் காயமடைந்தனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி பஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தற்காலிமாக அதன் அருகே பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. அப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த பஸ்நிலைய சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக பெய்த மழையின் காரணமாக பஸ்நிலைய சாலை குண்டும்-குழியுமாக பெரிய, பெரிய பள்ளங்களுடன் உள்ளது. அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. பஸ் நிலையம் அருகே அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளதால் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமப்படுகின்றனர்.
காயம்
இதற்கிடையே நேற்று மாலை கறம்பக்குடியில் கனமழை பெய்தது. இதனால் பஸ் நிலைய சாலை பள்ளத்தில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு வயது குழந்தையுடன் சென்ற தங்கராசு என்பவர் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்தார். குழந்தையும் நீரில் மூழ்கியது. இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய குழந்தையை மீட்டனர். இதில் தங்கராசுவுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் குழந்தையும், அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதேபோல, குணசேகரன் (வயது 26), பெருமாள் (50), ராஜேஷ் (25) ஆகிய 3 பேரும் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர். கறம்பக்குடி பஸ்நிலையத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.