கண்மாய் நிரம்பி வயல்வெளியில் புகுந்த வெள்ளம்
கண்மாய் நிரம்பி உபரிநீர் அதன் அருகே உள்ள வயல்வெளியில் புகுந்ததால் நெற்பயிர் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
சிங்கம்புணரி,
கண்மாய் நிரம்பி உபரிநீர் அதன் அருகே உள்ள வயல்வெளியில் புகுந்ததால் நெற்பயிர் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
வயல்வெளியில் புகுந்தது
சிவகங்கை மாவட்டம் தென் சிங்கம்புணரி கிராமத்தில் உள்ள நெடுங்குண்டு வயல்பகுதியில் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது கதிர்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சலனி கண்மாய் நிரம்பி, அங்கிருந்து உபரிநீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் நெற்பயிர் தண்ணீரில் தத்தளிக்கிறது.
விவசாயிகள் கவலை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை இன்றி இப்பகுதியில் முறையாக விவசாயம் செய்யாமல் இருந்த நிலையில், கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெய்த மழையை நம்பி 60 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. ஆனால் கடும் மழையால் கண்மாய் தண்ணீர் வயலுக்குள் புகுந்ததால் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
6 கண்மாய்கள் முழுமையாக நிரம்பி சலனி கண்மாய் நிரம்பியதாலும், சலனி கண்மாயில் கலுங்கு வசதி இல்லாததாலும் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மறுகால் போகும் அணைக்கட்டினை உயர்த்தி கட்டியதாலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. கடன் வாங்கி விவசாயம் செய்த எங்களைப்போன்ற விவசாயிகளின் சோகத்தில் உள்ளனர். இந்த தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்கவேண்டும். நீரில் மூழ்கி சேதமான பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.